It

Wednesday, August 13, 2014

நுண்திட்டமிடல்களுடன் கூடிய ஊடக துவேஷம்பற்றி அறிந்து கொள்ள பாரிய பணிசெய்கிறது “பரிவர்த்தனம்”

சமீப ஆண்டுகளாக இலங்கை முஸ்லிம்களை இலக்கு வைத்து சிங்கள பெளத்த தீவிரவாத இயக்கங்களும் குழுக்களும் வன்முறைகளை ஏவி வருவது பகிரங்கமான விடயம்.
இந்த வன்முறைகள் பல்வேறு திட்டமிடல்களுடனும் , அதிகார வர்க்க பின்புலத்துடனும் மேற்கொள்ளப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது.
இருந்த போதிலும் பொது பல சேனா, ஜாதிக ஹெல உறுமய போன்ற இயக்கம் சார் சக்திகளையும் ஞானசார தேரர், உதய கம்மன்பில முதலிய தீவிரப் போக்கு நபர்களையும் பற்றித்தான் விமர்சனங்கள் கிளம்புகின்றன. இவர்கள் மாத்திரம்தான் முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிடல்களை செய்கிறார்கள் என்றே பரவலாக நம்பப்படுகிறது. 
இவற்றுக்கு அப்பால் பாரிய ஊடக துவேசம் அல்லது ஊடக வன்முறை ஒன்றும் நுண் திட்டமிடல்களுடன் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சிங்கள, ஆங்கில நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் இச் செயற்பாடுகளை மிக அவதானமாகச் செய்யும் பணிகளை முடுக்கி விட்டிருக்கின்றன.
இவ்வாறான செய்திகள், கட்டுரைகள் போதிய அளவுக்கு தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வாசகர்களுக்கு கிடைப்பதில்லை. முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களுடன் ஒருவாரத்தில் சிங்கள ஆங்கில மொழிகளில் மூன்று கட்டுரைகள் வெளி வந்தால் மாதத்தில் ஒரு கட்டுரையைத்தான் படிக்க முடிகிறது. அதுவும் அரிதாக எப்போதாவது.
முஸ்லிம் இயக்கங்கள் சார்ந்து வரும் எங்கள் தேசம், மீள்பார்வை போன்ற பத்திரிகைகளும் சரி நவமணி, விடிவெள்ளி வாரப் பத்திரிகைகளும் சரி இம்மாதிரி முஸ்லிம்களைக் குறிவைத்து வெளிவரும் ஆக்கங்களை மொழிமாற்றம் செய்து தருவதிலும் முன்வைக்கப்படும் குற்றச் சாட்டுகளுக்கு முறையான பதில் கொடுப்பதிலும் ஆற்றும் பணி மந்தமானதாகவே இருக்கிறது.
ஞானசார தேரரின் பொதுக்கூட்ட உரைகளையும் உதய கம்மன்பிலவின் செய்தியாளர் மாநாட்டின் கருத்துகளையும் மட்டும்தான் தொடர்ச்சியாக தமிழில் அறியக்கிடைக்கிறது. ஆனால் இவர்களது பிரச்சாரங்களைத் தாண்டிய தூண்டுதல்கள் சிங்கள ஆங்கில பத்திரிகைககள் மூலம் சிங்கள பெளத்தர்களை மிக வேகமாக சென்றடைந்து கொண்டிருப்பது தெரிய வருவதுமில்லை, தெரியப் படுத்தப் படுவதுமில்லை.
குறைந்த பட்சம் இவற்றை தெரிந்து கொள்ளுவதற்கும், தேசிய நல்லிணக்கத்திற்கான தயார்படுத்தல்களின் போது முன் வைக்கப்படும் குற்றச் சாட்டுக்களுக்கு சந்தேகங்களுக்கு பதிலிறுப்பதற்கான சாதக சூழலை அடைந்து கொள்ளுவதற்குமாகவாவது போதிய மார்க்கம் கண்டறியப்படவில்லை.
இந்நிலையில் கலைமகன் பைரூஸ் தனது “பரிவர்த்தனம்” என்ற வலைப்பூவில் சிங்களப் பத்திரிகைகளில் பிரசுரமாகும் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துகளைக் கொண்ட ஆக்கங்கள் அனைத்தையும் தமிழுக்கு மொழி மாற்றம் செய்து பதிவிடும் பணியைத் துவங்கி இருக்கிறார்.
வாசிப்பை தூண்டக் கூடியதும் புரிதலை இலகு படுத்தக் கூடியதுமான மொழிப் பயன்பாடு, மூலக் கருத்தை சிதைவின்றிக் கொடுப்பதில் காட்டப்பட்டிருக்கும் அவதானம் என்பன சிறப்பாக இருக்கின்றன.
கலைமகன் பைரூஸின் தமிழ் இலக்கியம் மற்றும் எழுத்துத் துறையில் உள்ள அனுபவம், சிங்கள மொழியில் உள்ள புலமை, வாசிப்பு தேடல் என்பவற்றின் மீதான தீவிரம் ஆகியன அவரது இந்த முயற்சியின் வெற்றிக்கு பலம் சேர்த்திருக்கின்றன.
இதேபோல் ஆங்கில மொழித் திறனாளர்களும் முயன்று பாருங்கள்.
-எம்.எல்.எம். அன்ஸார்

0 comments:

Post a Comment