It

Tuesday, March 24, 2020

நல்லிணக்கம்!


-தமிழில் : மதுராப்புர, கலைமகன் பைரூஸ்

சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நான் கொழும்பு தேசிய மருத்துவமனையின் பல்கலைக்கழக அறுவை சிகிச்சை பிரிவில் உள்ளிருப்புப் பயிற்சி நியமனத்துடன் வேலைக்கு ருகிறேன். வந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு வார்ட் மாற்றப்பட்டு பெண்கள் அறுவைச் சிகிச்சை வார்ட்டின் உள்ளிருப்புப் பயிற்சி வைத்தியராக சேவைபுரிந்து கொண்டு இருக்கும் போது, ஒருநாள் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையிலிருந்து
இடம்மாற்றப்பட்டு நோயாளி ஒருவர் வருகிறார்.  நோயாளியின் பெயர் பார்வதி. பார்வதி அம்மாவுக்கு சுமார் 70 வயது இருக்கும். விபத்து வார்ட்டில் அனுமதிக்கப்பட்ட பார்வதி அம்மா இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் எங்கள் வார்ட்டுக்கு வந்தார்

யாழ்ப்பாண வைத்தியசாலையிலிருந்து அவர் இங்கு வரக்காரணம், capsule endoscopy சோதனைக்காகவே. பார்வதி அம்மாவுக்கு மலத்துடன் அதிகமாக இரத்தப்போக்கு  ஏற்பட்டதனாலேயே அவர் யாழ்ப்பாண மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். Upper GI, Lower GI endoscopy சோதனைகள் இரண்டிலுமே இரத்தப் போக்கிற்கான காரணம் அறியப்படாமையினாலேயே தேசிய மருத்துவமனைக்கு மாற்றி அனுப்பி வைக்கப்படுகிறார். வார்ட்டிற்கு வரும்போதும் உடம்பில் இரத்தத்தின் அளவு நன்கு குறைவாகவே காணப்பட்டது. ஈமோக்குளோபின் 4 g/dL. அடுத்த வார்ட்டிலிருந்து நான்கு பொயிண்ட் இரத்தம் கொடுத்துத்தான், நோயாளியை எங்கள் வார்ட்டுக்கு அனுப்பிவைத்தார்கள். என்றாலும் தொடர்ந்து இரத்தம் போய்க்கொண்டே இருந்தது.

யாழ்ப்பாணம் நல்லூர்தான் பார்வதியின் ஊர்...

பார்வதி அம்மாவுக்கு ஒரு சிங்கள வார்த்தை கூடத் தெரியாது. எனக்குக் கொஞ்சம் கூட தமிழ் தெரியாது. நல்ல நேரத்திற்கு பார்வதி அம்மாவுடன் 40 வயது மதிக்கத்தக்க அவரது மகள் வந்திருக்கிறார். பார்வதியின் மகளுக்குச் சற்றுச் சிங்களம் கதைக்கத் தெரியும். அதனால் நான் மகளிடமிருந்து பார்வதியின் நோய் பற்றிய விடயங்களைத் தெரிந்துகொள்கிறேன். பிறகு பார்வதியிடம் போய் நாடி பார்ப்பதுடன், பார்வதி அம்மாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு சிரிப்பேன். பார்வதி அம்மா தமிழில் ஏதோ சொல்கிறார். பார்வதியின் மகள் அவற்றை எனக்கு மொழிபெயர்த்துச் சொல்கிறார். எப்பொழுதும் காலையிலும் மாலையிலும் வார்ட்டைச் சுற்றி வரும்போது, நான் பார்வதியின் கையைப்பிடித்துக்கொண்டு மகளிடம் அவர் பற்றிக் கேட்பேன். பார்வதி இரண்டு கைகளையும் கூப்பிக்கொண்டு ஏதோ சொல்கிறார். எதுவுமே விளங்காது விட்டாலும் கூட எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு நான் நல்லூர் வரும்போது பார்வதியை வந்து பார்க்கிறேன் என்று சொல்லுமாறு பார்வதியின் மகளிடம் சொல்வேன். அதனைக் கேட்டுவிட்டு பார்வதி மகிழ்ச்சியுடன் சிரித்துக்கொண்டு, ஏதோ சொல்வது மட்டும் எனக்குத் தெரிகிறது.

Capsule endoscopy பரிசோதனைக்கு capsule இனை விழுங்கி 8 மணித்தியாலங்களின் பின்னர் மெஷினை உடம்பில் இணைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் அந்த மெஷினிற்கு வருகின்ற தகவல் பதிவுகளை விஷேட வைத்தியர் முழுமையாக பார்த்ததன் பின்னரே கடைசி அறிக்கையைக் கொடுக்க முடியும். துரதிர்ஷ்டவசமாக  பார்வதி அம்மா உட்கொண்ட capsule எட்டு மணித்தியாலங்களாக  oesophagus இல் சிக்கிக்கொண்டுள்ளது. அதில் வேறு எதுவும் Record ஆகி இருக்கவில்லை. இவற்றைச் செய்வதற்கு பார்வதி அம்மா வார்ட்டுக்கு வந்து நான்கு நாட்கள் ஆகின்றன.

இதற்கிடையிலும் இரத்தம் குறைந்து கொண்டே செல்வதால் தினந்தோறும் இரத்தம் கொடுக்க வேண்டிய நிலை எங்களுக்கு ஏற்பட்டது. ஒருநாள் காலை 5 மணியிருக்கும். வார்ட்டிலிருந்து எனக்கு ஒரு call வருகிறது. பார்வதி அம்மாவுக்கு நிறையவே இரத்தம் போயுள்ளது. blood pressure மிகவும் குறைந்துள்ளது. உள்ளிருப்புப் பயிற்சிக்கு வந்த நாளிலிருந்து இதுவரை ஒருபோதும் நான் அதிகாலை 5 மணிக்கு எழும்பவே இல்லை. என்றாலும், அன்று குறித்த நேரத்தில் எழுந்து 15 நிமிடங்கள் அளவில் தயாராகி உடனடியாக வார்ட்டுக்கு ஓடுகிறேன். போய் சேலைன் கொடுத்து இரத்தம் கொண்டுவந்து கொடுத்து எனது சீனியர்களுக்கும் இதுபற்றிச் சொல்லி அதோ இதோ  என்று Arrest ஆக இருந்த பார்வதி அம்மாவைக் காப்பாற்றுகிறோம். என்றாலும் கேள்விகளுக்கு விடை கிடைக்காததால் அன்றே Angiogram செய்து பார்க்க  வேண்டும் என்று பார்வதியைப் பார்க்கின்ற எங்கள் Sir எங்களிடம் சொல்கிறார். 

அவரே Interventional radiologist உடன் பேசி Angio embolisation செய்வதற்கு தயார் படுத்துகிறார். ஒருவாறு மாலை 2 - 3 மணியாகும் போது வேலையைச் செய்கிறார்கள். இரத்தம் போகின்ற இரத்த நாளத்தைக் கண்டுபிடித்து அதனை  embolize செய்கிறோம். வார்டுக்கு கொண்டுவரப்பட்ட பார்வதிக்கு இப்போது இரத்தம் நின்றுவிடுகின்றது. பல நாட்களாக எதுவுமே சாப்பிடாத பார்வதி இப்போது முன்னர்போல் சாப்பிடுகிறார். கட்டிலிலிருந்து இறங்கி உட்கார்ந்து கொள்கிறார். என்றும் போல் நான் போய்க் கதைக்கும்போது பார்வதி இரண்டு கைகளையும் கூப்பி, ‘தெய்யோ  தெய்யோ’ என்று என்னிடம் சொல்கிறார்.

என்றும்போல் நானும் பார்வதியிடம் நல்லூர் வந்து பார்வதியைப் பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டுச் செல்கிறேன்... இப்போது பார்வதிக்கு மிகவும் நன்றாக இருக்கிறது. பார்வதி இப்போது வீட்டுக்குப் போகலாம் என்று சேர் வந்து சொல்கிறார்.  இங்கிருந்து யாழ்ப்பாணத்திற்குப் போக வேண்டும் என்பதால் அங்கிருந்து வருகின்ற Ambulance ஒன்றில் பார்வதியை யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கு நாங்கள் தீர்மானிக்கின்றோம். அதனைக் கேட்டவுடனேயே பார்வதியும் பார்வதியின் மகளும் ‘எங்களை அங்கு அனுப்ப வேண்டாம்’ என்று மிகவும் தாழ்மையாகக் கேட்டுக் கொள்கிறார்கள். ஏன் ? என்று நாங்கள் நாங்கள் கேட்டதற்கு அங்குள்ள வைத்தியசாலையில் எங்களை ஒழுங்காகக் கவனிக்கவில்லை... உங்களைப் போல் யாரும் வந்து பேசவுமில்லை... இவ்வாறு இருவரும் ஆளுக்காள் மாறி மாறி அவர்களைக் குறை சொன்னார்கள். அந்த வைத்தியாசலையில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த வைத்தியர்களும் பணியாட்களுமே என நான் எனக்குள் சிந்தித்தேன்.  

இங்கிருந்து டிக்கட் வெட்டுங்கள். எப்படியேனும் எங்களுக்கு பஸ்ஸில் போய்க் கொள்ளலாம் என்று சொன்னாலும்கூட அதிலிருக்கின்ற விபரீதம் பற்றித் தெரிந்திருப்பதனால் எவ்வாறேனும் யாழ்ப்பாண வைத்தியசாலையொன்று அனுப்பி வைப்பதற்கு பார்வதியின் விருப்பத்தினைப் பெற்றுக் கொள்கிறோம். அந்த வைத்தியசாலைக்குச் சென்றால்தான் வீட்டுக்குச் செல்லலாம் என்ற சொன்னவுடன்தான் அவர்கள் அதற்கு இணங்கினார்கள்... அவர்கள் போவதற்கு முன்னர் பார்வதியிடம் போய் என்றைக்கும்போல் சிரித்த வண்ணம் எனக்குத் தெரிந்த மொழியான சிங்களத்தில் பார்வதியின் மகளிடம் பேசிய போது, சிங்களத்தில் ஒரு சொல் கூடத் தெரியாத பார்வதி அம்மா கண்களில் கண்ணீர் ஊற்றெடுக்க எனது கைகளைப் பிடித்துக்கொண்டு முத்தமிடுகிறார்... நான் என்றும்போல் பார்வதி அம்மாவைப் பார்க்க வருவதாகச் சொல்கிறேன்... Ambulance வந்து இரவு 8 மணிக்கெல்லாம் பார்வதி அம்மாவை அழைத்துச் செல்கிறது. நானும் அங்கு சென்று பார்வதி அம்மா வாகனத்தில் ஏறிச் செல்லும்வரை பார்த்திருக்கிறேன்... 

தெற்கின் ஒரு மூலையிலிருந்து கொழும்புக்கு வருகைதந்த எனது உள்ளத்தில் வடக்கிலிருந்து வருகைதந்த பார்வதி அம்மா - தமிழ் மக்கள் பற்றிய இதமானவொரு மனப்பதிவை உள்ளத்தில் நிலையாய்க் குத்திவிட்டு Ambulance என் கண்ணுக்கு எட்டாத தூரம்வரை எனக்குக் கையசைத்து அசைத்துச் செல்கிறது.

போவதற்கு முன்னர் எனது phone number இனை எடுத்துக்கொண்ட பார்வதியின் மகள் இன்றும் இருந்திருந்து எனக்கு தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டு, கொச்சைச் சிங்களத்தில் என்னிடம் சுகதுக்கம் விசாரித்துக் கொண்டிருக்கிறார். தற்போது வரைக்கும் நான் தமிழில் கதைப்பதற்குக் கற்றுக்கொள்ள முடியவில்லையே என்று எனக்குள் நானே வெட்கப்படுகிறேன்.

நான் ஏன்தான் இந்தக் கதையை எழுதினேன் என்றால், இந்நாட்களில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படுவது தொடர்பாக மக்களிடையே பேரளவில் பேசப்பட்டு வருகின்றது. அதனால்தான். 2015 தெரிவான நல்லாட்சி அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக முதலில் முன்னெடுத்த கைங்கரியம் தமிழில் தேசிய கீதத்தை இசைப்பதற்கு ஆரம்பித்ததே... அந்த செயற்பாட்டினால் இன்று மக்களிடையே இருந்த நல்லிணக்கமும் தற்போது இல்லாமல் போயுள்ளதாகவே நான் நினைக்கிறேன்....

நல்லிணக்கத்திற்கு மொழி தடையாக இருப்பதே இல்லை என்பதை நான் பார்வதியிடமிருந்து கற்றுக்கொண்டேன். வடக்கிலும் தெற்கிலும் வாழ்கின்ற பெரும்பாலான மக்களிடையே நல்லிணக்கம் இருக்கத்தான் செய்கிறது. அரசியல்வாதிகளின் உள்ளத்தில்தான் அது இல்லாமலிருக்கின்றது...

வடக்கிலுள்ள ஏழ்மையில் வாடுகின்ற அப்பாவித் தமிழ் மக்களுக்கு சிங்களவர்களிடமிருந்து ஏற்படுகின்ற அநீதியை விட பெரும் அநீதியும் வெறித்தனங்களும் உயர்ந்தவர்கள் நாங்கள்தான் என்று எண்ணிக்கொண்டிருக்கின்ற தமிழர்களிடமிருந்தும் அரசியல்வாதிகளிடமிருந்தும் ஏற்படுகின்றது... வடக்கிலிருக்கின்ற பெரும்பான்மை தமிழர்களின் அவாவாக இருப்பவை பொலிஸ் அதிகாரங்களோ, தமிழில் தேசிய கீதம் இசைப்பதோ அல்ல. இந்நாட்டில் உள்ள அடுத்த மக்களைப் போலத் தங்களும் நல்லதொரு வாழ்க்கை நடாத்த வீடொன்று, பொருளீட்ட ஒரு வியாபாரம், சிறந்த கல்வி, நோய்நொடிகளுக்கு மருந்து எடுப்பதற்கு சிறந்த சுகாதார வசதிகள் போன்றனவே. 

வடக்கில் உள்ள அரசியல்வாதிகள் என்றுமே இந்த விடயங்களைக் காரணம் காட்டி அந்த அப்பாவி மக்களின் வாக்குகளைப் பெற்று, தங்களது தனிபட்ட அபிலாசைகளுக்காக தமிழ் மக்களைப் பலிக்கடாக்களாக மாற்றுகிறார்கள். 

இந்த விடயங்களை மக்கள் தெரிந்துகொள்ளும் வரை அல்லது அவ்வாறின்றி இந்தத் தேசிய கீதத்தின் பேரால் உருவாக்கப்பட்டுள்ள இனவாத அரசியல் கட்சியை இந்நாட்டிலிருந்து இல்லாதொழித்து ஒவ்வொருவரையும் பிரதான அரசியலுக்குள் நேரடியாக இணைத்துக் கொள்வதற்கான காலம் வரும்வரை இந்த வடக்கு கிழக்கிற்கான பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என நான் நினைக்க மாட்டேன். நல்லிணக்கத்திற்கான பாரிய முட்டுக்கட்டையாக இருப்பது அரசியலே அன்றி, தேசிய கீதம் பாடுவது என்ன மொழியில் என்பதில் அல்ல...

-வைத்தியர் Dilip Chamara Madanayaka பக்கத்திலிருந்து..
-தமிழில் : மதுராப்புர, கலைமகன் பைரூஸ்


-------------------------------------
(தயவுசெய்து, எனது ஆக்கங்களை மீள்பிரசுரம், மீள்பதிவு செய்பவ்கள் எனது பெயரையும் உள்ளிடுமாறு விநயமாக வேண்டுகிறேன்... )
-------------------------------------


0 comments:

Post a Comment