It

Monday, August 17, 2015

சிங்களவர்களே விழித்தெழுங்கள்….! தமிழ் கூட்டமைப்பு ஈழம் கேட்கிறது! – கோத்தபாய

“தமிழ் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வரவுள்ள அரசாங்கத்தில் அவர்களின் எதிர்பார்ப்பு 13 திருத்தச் சட்டத்தின்படி அதிகாரப் பிரிவினையே ஆகும். வடக்கு கிழக்கினை ஒன்றிணைப்பதாகும். எல்.ரீ.ரீயினரின் கொள்கையையே தமிழ் கூட்டமைப்பு முன்னெடுத்துச் செல்கின்றது” என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

குளியாப்பிட்டி எம்பவ பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து அங்கு உரையாற்றிய அவர்,

சிறையில் கைவிலங்குகளுடன் நிற்கின்ற பயங்கரவாத சந்தேகநபர்கள் அனைவரையும் விடுதலை செய்வது தொடர்பிலும் தமிழ் கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் யுத்தத்தை முன்னெடுத்த தலைவர்கள், இராணுவ உயரதிகாரிகள், படைத்தளபதிகள் அனைவரையும் ஜெனீவா மனித உரிமைகள் கவுன்சிலின் யுத்த நீதிமன்றின் முன் கொண்டு செல்வதற்கு அரசாங்கம் உதவியாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது. இது மிகவும் பயங்கரமான விடயமாகும். 30 ஆண்டு யுத்தத்தின் பின்னர் நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக எங்களது அரசாங்கம் வெளிநாடுகளிலிருந்து கடன் பெற்று, அதனை சிறப்பாக பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தியது. நாங்கள் சீனாவிலிருந்தே அதிக கடன் பெற்றோம்.

நல்லாட்சிக்கான அரசாங்கம் சீனாவிலிருந்து கடன் பெற்றுக் கொள்வதை நிறுத்தியுள்ளது. அதனால் இன்று நாட்டின் பொருளாதாரம் கீழிறங்கிச் செல்கின்றது. நெல்லுக்கு சரியான விலை கொடுக்க முடியாதுள்ளது. தென்னை, இறப்பர், பால் உற்பத்திகளுக்கும் இன்று விலை நிர்ணயம் இல்லாதிருக்கின்றது இதனால்தான். 80 களுக்கு மீண்டும் அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது. சென்ற புலிப் பிரச்சினைக் காலத்தில் வடக்கில் பொலிஸாரின் வாகனங்கள் தீப்பற்ற வைக்கப்பட்டன என்பதை நாம் அறிவோம். நீதிமன்றங்கள் தகர்க்கப்பட்டன. வீதிகளை மறித்து ரயர்கள் பற்றவைக்கப்பட்டன. விடுதலைப் புலிகளின் கொடிகள் உயர்த்தப்பட்டன. எதிர்ப்புச் சுவரொட்டிகள் எங்கும் ஒட்டப்பட்டன. 80 களில் வடக்கில் இருந்தவற்றின் இலட்சணங்கள் மீண்டும் காணக் கிடைக்கவுள்ளது மிகவும் பயங்கரமான நிலைமையேயாகும்.

-ரிவிர

தமிழில் – கலைமகன் பைரூஸ்


0 comments:

Post a Comment