It

Monday, August 17, 2015

மகிந்தர் இன்னும் இருந்திருந்தால் நாடு கிரேக்கமாயிருக்கும்! - சிரேஷ்ட விரிவுரையாளர் டெரன்ஸ் புரசிங்க

தமிழில் - கலைமகன் பைரூஸ்

ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தெளிவான சிறப்பொன்றுள்ளது. நூறு நாள் திட்டத்தை அடிப்படையாக வைத்தே அது நடைபெற்றது. அதற்கேற்ப ஜனநாயக மறுசீரமைப்பே அதில் மிகவும் முக்கியத்துவம் பெற்றது. அதிலும் மேலாக நிறைவேற்று அதிகாரங் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாதொழித்தல் என்ற வார்த்தைப் பிரயோகம் முதன்மை இடத்தில் நின்றது. இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னர் முதன் முறையாக ஆயிரத்துத் தொள்ளாயிரத்து தொன்னூற்று நான்காம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்கும் போது அவ்வாறு வாக்குறுதியளித்தார். யதார்த்தபூர்வமான ஜனநாயகத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் எனும் நோக்கத்துடனேயே அவர் அன்று அந்த வாக்குறுதியை அளித்தார். என்றாலும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

ஜனாதிபதி முறைமையில் பல இடர்பாடுகள் இந்நாடு சந்தித்திருந்தாலும், அதில் மிகக் கூடுதலான இடர்பாடுகள் மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்ற கையோடு அதிகரித்தது. பதவிக்கு வந்ததும் நிறைவேற்று அதிகார முறைமையை பயன்படுத்தாதவிடத்தும், அந்த நிறைவேற்று அதிகாரமுறைமையை இல்லாதொழிப்பதாக வாக்குறுதியளித்தே அவர் பதவிக்கு வந்தார். என்றாலும், மெல்ல மெல்ல வாக்குறுதிகள் அவரால் நிராகரிக்கப்பட்டு அவரது போக்கிற்கேற்ப ஜனாதிபதி முறைமையை ஆக்கிக் கொண்டார். ஈற்றில் 18 ஆவது திருத்தச் சட்டம் எனப்படுகின்ற ஜனநாயகத்திற்கு முற்றிலும் எதிரான திருத்தச் சட்டத்தைக் கொண்டுவரக் கூடிய அளவுக்கு அவர் செயற்பட்டார். அதன் மூலம் கடுமையான ஏகாதிபத்திய நிழல் நாடெங்கிலும் புரையோட வழியமைத்தார்.

யுத்தம் நடைபெற்ற காலத்தில் நடெங்கிலும் செய்யப்பட்ட கொலைகள் பற்றி மறந்தாலும், யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் தெற்கில் சிங்கள சமூகத்தினிடையே பிரச்சினைகள் முளை கொண்டன. மனித உரிமை மீறப்பட்டது. ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டார்கள். காணாமற் போனார்கள். நாட்டை விட்டு வெளியேற்றம் செய்யப்பட்டார்கள். பொதுமக்கள் அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு விதத்திலும் கொதித்து எழும்பினார்கள். ரத்துபஸ்வல, ஹலவாத்த, கட்டுநாயக்க போன்ற இடங்களில் தங்களுடைய உரிமைகளுக்காகப் போராடிய மக்கள் கொலை செய்யப்பட்டார்கள். அரசாங்கத்தின் மூலம் உருவாக்கப்பட்ட இனவாதக் கும்பல் பேருவளை போன்ற இடங்களில் உயிர்களையும், உடைமைகளையும் அழித்தொழித்தது. அதிகமானோரின் உடைமைகள் இல்லாதொழிக்கப்பட்டதுடன், அவர்களுக்குள் மரண அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்ட காலப்பிரிவு இதற்கு முன் ஒருபோதும் இருந்ததில்லை. அக்காலப் பிரிவில் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளின்பாலான தாகம் நாட்டின் சிறுபான்மையினருக்கு மட்டுமன்றி பெரும்பான்மையினருக்கும் மிகவும் தேவைப்பாடாக மேலெழுந்தது. சென்ற ஜனாதிபதித் தேர்தலின்போது அதுவே வெடித்துச் சிதறியது. நாட்டினுள் இருந்த அந்த ஜனநாயகத்திற்கு எதிரான அனைத்தும் மைத்திரிபால சிரிசேன ஜனாதிபதியானவுடன் முடிவுக்கு வந்தன.

(தொடரும்)

0 comments:

Post a Comment